தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி : சந்தேகநபர் கைது.!

62

தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பணம் மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கோசல விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில், சர்வதேச லயன்ஸ் கிளப் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களை சேர்க்கும் வகையில் மாத்தறை ராகுல சந்திக்கு அருகிலுள்ள கல்வி நிறுவனத்தில் கடந்த மார்ச் 28ஆம் திகதி அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கொரிய மொழிப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என கூறி, ஒவ்வொருவரிடமும் ரூ.20,000 பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், ரூ.35,000 மதிப்புள்ள மொழிப் பயிற்சி வவுச்சர்கள் வழங்கப்படும் என ஆசை காட்டப்பட்டது. விசாரணையின் போது, இரு இரகசிய அதிகாரிகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மார்ச் 28ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் காலியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என்பதுடன், முன்னர் ஊடகவியலாளராகவும் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. மேலும், அவர் காலியில் மொழிப் பயிற்சி நிலையம் நடத்தி, ஜப்பான் வேலை வாய்ப்புகள் தொடர்பிலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், தென் கொரிய வேலை வாய்ப்பு திட்டம் என்பது இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு செயற்திட்டம் மட்டுமே என்றும், எந்த தனியார் நிறுவனம் இதனை முன்னெடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளிநபர்களிடம் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கி ஏமாற வேண்டாம் எனவும் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.