புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு: CID விசாரணையில் வெளிச்சம்.!!

63

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மீட்டியாகொட பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

கடந்த 29ஆம் திகதி மீட்டியாகொட – மாகொட பகுதியில் மனிதப்படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தி வருகிறது.

அந்த விசாரணையின் போது வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், மீட்டியாகொட பகுதியில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களும், 9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 13 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் மீட்டியாகொட பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்; மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.