மட்டக்களப்பு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் ; கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

150

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவங்களை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து கைது செய்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தும் இன்று (01) புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. காந்திபூங்காவில் அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இளைஞர் யுவதிகள் திருமலை வீதியூடாக ஊர்வலமாக சென்று, மட்டக்களப்பு பொலிஸ் சுற்றுவட்டத்தை கடந்து மீண்டும் காந்திபூங்காவில் நிறைவடைந்தது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு உடைகள் அணிந்து, “நீதிவெல்லட்டும்”, “அநீதி வீழட்டும்”, “குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தவொரு சட்டத்தரணியும் ஆதரவாக ஆஜராகக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர். இதேவேளை, சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த கிழக்கு மாகாண பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

நீதியினை நிலைநாட்டும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள இளைஞர்கள், தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் போராட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.