ஆபத்தான முச்சக்கர சாகசம் செய்த இருவர் கைது.!!

206

வெலிவேரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (30) நெடுங்கமுவிலிருந்து மீகஹவத்த பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

வைரலான வீடியோவை பொலிஸார் ஆய்வு செய்ததன் மூலம் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்து, வெலிவேரிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் 22 வயதுடைய ஓட்டுநரும் 23 வயதுடைய வாகன உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். வைத்திய பரிசோதனையில் உரிமையாளர் கஞ்சா உட்கொண்டிருந்ததும், சாரதி போதை மாத்திரைகளை பயன்படுத்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபருக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான பொதுமக்கள் ஒத்துழைப்புகள் குற்றங்களை தடுப்பதில் முக்கியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆபத்தான வாகன ஓட்டம் மற்றும் சதிநோக்கமற்ற கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்; மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.