கூப்பர் கொனொலியின் அதிரடி அரைசதம்: பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்களால் வெற்றி.!

132

 நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) இரவு நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ், 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பெற்றது.

ஆட்டத்தின் போது ஆரம்பத்திலேயே ப்ரியான்ஷ் ஆரியா 7 ஓட்டங்களில் வெளியேறியபோதிலும், கூப்பர் கொனொலி மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் இணைந்து இரண்டாவது விக்கெட்டில் 40 பந்துகளில் 76 ஓட்டங்களைச் சேர்த்தனர். ப்ரப்சிம்ரன் சிங் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் வீழ்ந்ததால் பஞ்சாப் தடுமாறியபோதிலும், கூப்பர் கொனொலி 44 பந்துகளில் 5 பவுண்டறிகள் மற்றும் 5 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 18 ஓட்டங்களைப் பெற்றார்; பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களுக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. ஷுப்மான் கில் 39 ஓட்டங்களும் ஜொஸ் பட்லர் 38 ஓட்டங்களும் பெற்று 2ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைச் சேர்த்தனர். க்லென் பிலிப்ஸ் 25, வொஷிங்டன் சுந்தர் 18, சாய் சுதர்சன் 13 ஓட்டங்கள் பெற்றனர்; ராஹுல் தேவாட்டியா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளதுடன், கூப்பர் கொனொலி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.