பஸ்ஸில் ஏற முயன்ற பெண்ணின் கால்கள் நசுங்கி கடும் காயம்.!

185

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில் ஏற முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வளைவு பகுதியில் மெதுவாக சென்றுகொண்டிருந்த பஸ் நிறுத்தப்படும் என எண்ணிய பெண், மிதிபலகையில் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் வழுக்கி வீதியில் விழுந்த நிலையில், பஸ்ஸின் முன்பக்க சக்கரம் அவரது கால்கள் மீது ஏறியதால் இரு கால்களும் நசுங்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் பஸ்ஸின் சாரதி நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அன்றைய தினம் வழக்கமான பஸ் சேவை இல்லாததால் அதிகளவான பயணிகள் அந்த பஸ்ஸில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக அந்தப் பகுதியில் போதுமான போக்குவரத்துச் சேவை இல்லாமையே என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.