மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாற்றம் கோரி போராட்டம்.!

142

 மன்னார் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கல்வி மற்றும் அபிவிருத்தி பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, தற்போதைய அதிபரை மாற்றி தரம் 1 தகுதியான புதிய அதிபரை நியமிக்கக் கோரி திங்கட்கிழமை (30) காலை பாடசாலை முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர்.

போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் ஒருவர் அதிபராக செயல்பட்டு வருவதால் கல்வித் தரம் குறைந்துள்ளதாகவும், மாணவர்கள் பிற பாடசாலைகளுக்கு மாற்றம் செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினர். பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கான கோரிக்கைகள் பலமுறை அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். போராட்டத்தின் போது வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை தந்து கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

பின்னர் போராட்டக்காரர்கள் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய பாடசாலை மத்திய அரசின் கீழ் உள்ளதால், அதிபர் நியமனம் கல்வி அமைச்சின் கீழ் இருப்பதாக அரசாங்க அதிபர் விளக்கினார்.

தற்போதைய நிலையை பரிசீலித்து அதிபர் மாற்றம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குறித்து நடவடிக்கை எடுக்க சுமார் 10 நாட்கள் அவகாசம் கோரியதையடுத்து, போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கை மனுவை கையளித்து போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்தனர்.