மட்டக்களப்பு கடத்தல் சம்பவம்: மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் திகிலான அனுபவம் பகிர்வு!

188

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் ஒருவர், தமக்கு நடந்த திகிலான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது, முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் திட்டமிட்ட முறையில் தன்னை ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தபோது, மற்றொரு பெண் நட்பு காட்டி நகைக்கடைக்கு அழைத்துச் சென்றதுடன், பின்னர் மீண்டும் அதே வண்டியில் சேர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், ஜூஸ் குடிக்கக் கொடுத்து மயக்கமருந்து கலந்த பானம் வழங்கப்பட்டதாகவும், அதனை குடித்ததும் மயக்கமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மயக்கநிலையில் இருக்கும் போது, தன்னை வேறு பாதையில் அழைத்து சென்று கிணற்றில் வீசியுள்ளதாகவும், மயக்கம் தெளிந்தபோது தன்னை நீரில் மூழ்கிய நிலையில் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் தப்பிக்க முயன்று குரல் எழுப்பியதன் மூலம் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என எதிர்பார்க்கப்படுகிறது.