இயற்கை அனர்த்தக் கடன்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன – பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. வலியுறுத்தல்!

98

இலங்கை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நாடுகள் பெறும் கடன்கள் அவற்றின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘தித்வா’ சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில், கடன் அழுத்தங்களை குறைக்கும் பாதுகாப்பு முறைகளை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை, மண்சரிவு ஆகியவை இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை நீரில் மூழ்கடித்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஏற்கனவே நிதி ரீதியாக பலவீனமடைந்திருந்த இலங்கை சுமார் 6–7 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.

இதேபோன்று இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டு 3000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த அனர்த்தங்கள் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளன.

இந்த நிலைமையால் கடன் சுமை அதிகரித்து அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் குடும்பங்கள் மீது பெரும் அழுத்தம் உருவாகின்றது. இதற்கான தீர்வாக ‘அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்கான செவில்லா உடன்படிக்கை’ மூலம் காலநிலை மீள்திறன் கொண்ட கடன் அமைப்புகளை அறிமுகப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரனர்த்தங்கள் நேரிடும் போது கடன் திருப்பிச் செலுத்துதலை தற்காலிகமாக ஒத்திவைக்கும் நடைமுறைகள், அபாய மதிப்பீட்டு முறைகள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கும் திட்டங்கள் ஆகியவை எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.