மட்டக்களப்பு பெண்கள் கடத்தல்–கொலை வழக்கு: மயக்கமருந்து வழங்கிய 7வது சந்தேகநபர் தடுப்புக்காவல்.!

131

மட்டக்களப்பில் பெண்கள் மயக்கமருந்து கொடுத்து கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பில், மயக்கமருந்துகளை வழங்கியதாக கூறப்படும் ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (29) கொழும்பு வத்தளை பகுதியில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்ததுடன், பின்னர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.

விசாரணைகளில், சந்தேகநபர் உட்பட முன்னதாக கைது செய்யப்பட்டவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

கடந்த 20ஆம் திகதி நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மேலும், அந்த இளம் தாயின் 3 வயது குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்க நகைகள், வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரிகள் தலைமையில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சந்தேகநபர்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

இந்த வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.