மட்டக்களப்பு கொலை–கொள்ளை வழக்கு: மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி கைது.!

343

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவரான இவர், கும்பலுக்கு மயக்க மருந்து வழங்கிய பிரதான சூத்திரதாரி என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்றது. அப்போது பாழடைந்த கிணற்றிலிருந்து 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது மற்றும் 4 மாத குழந்தைகள் வயல்வெளியில் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 24 மணித்தியாலங்களுக்குள் 05 பேர் கைது செய்யப்பட்டனர்; இதில் ஒரு பெண், அவரது கணவர், தம்பி மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் அடங்குவர். மேலும், இரண்டு முச்சக்கரவண்டிகள், ஒரு கார், மற்றும் கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன், மேலும் ஒரு முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மருந்து முகவரான திவாகரன் மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கின் பின்னணி மற்றும் கும்பலின் செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன; சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.