மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி வேட்பாளர்: அதிமுக கூட்டணி அறிவிப்பு!

120

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக, கல்வியாளர் ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஏ.சி. சண்முகமும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டுள்ளனர். சுந்தர் சி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 6ஆம் திகதிக்குள் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட இயக்குநர் ஒருவர் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்குவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவரது மனைவி குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருப்பதும், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதும் இந்த வேட்பாளர் தேர்வில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.