யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி.!

188

யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாழக்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார். கோப்பாய் கட்டைப்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சபாரத்தினம் கெங்காதரனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவர் வீதியில் மதுபோதையில் உறங்கியிருந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் வீதி பாதுகாப்பு மற்றும் மதுபோதையின் ஆபத்துகள் குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.