கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

110

சட்டவிரோதமாக துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகை முனையத்தில் பயணப் பொதிகள் பெறும் பகுதியில் உரிமையாளர்களின்றி கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பைகள் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றது.

சோதனையின் போது, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. “பிளாட்டினம்” மற்றும் “மான்செஸ்டர்” வகையைச் சேர்ந்த மொத்தம் 200,000 சிகரெட்டுகள் அடங்கிய 1,000 கார்ட்டூன்கள் அந்தப் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்கத் தலைமையகத்தின் பிரதான களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோத இறக்குமதிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.