‘எக்ஸ்’ மீது போலீஸ் வழக்கு – பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்.!!

78

திருவனந்தபுரத்தில், பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ பரவிய சம்பவம் தொடர்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மீது கேரள சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் குறித்து தவறான தகவல்கள் பரவுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராஜு என்ற நபர் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில், அந்த வீடியோ பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியது என கண்டறியப்பட்டதுடன், அதை நீக்குமாறு ‘எக்ஸ்’ நிறுவனத்திடம் கோரப்பட்டும் அது நீக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வீடியோவை பகிர்ந்த நபரும் ‘எக்ஸ்’ நிறுவனமும் எதிராக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.