தாய் கொலை: காதலனுடன் சேர்ந்து சிறுமி சடலத்தை வீட்டில் புதைத்த அதிர்ச்சி சம்பவம்.!!

100

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, சடலத்தை வீட்டுக்குள் புதைத்த சிறுமி ஒருவர் ஒரு ஆண்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வேலை தொழிலாளியான அஞ்சு கடந்த ஆண்டு மே 12ஆம் திகதி மாயமான நிலையில், அவரது மூத்த மகள் அக்டோபர் 17ஆம் திகதி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையில், அஞ்சுவின் இளைய மகள் தனது காதலன் மோந்தி குமார் சிங்குடன் சேர்ந்து இந்தக் கொலைச் சம்பவத்தை திட்டமிட்டது தெரியவந்தது. சமூக வலைதளத்தின் மூலம் 2023 டிசம்பரில் அறிமுகமான இவர்களுக்கிடையேயான உறவுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு மே 12ஆம் திகதி வீட்டில் பதுங்கியிருந்த காதலன் கத்தியால் தாக்கி அஞ்சுவை கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் சடலத்தை வீட்டுக்குள் புதைத்து அதன் மீது கான்கிரீட் பூசப்பட்டதாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியும் அவரது காதலனும் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட நாட்கள் மறைக்கப்பட்ட இந்தக் கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், இத்தகைய குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்ற கவலையையும் எழுப்பியுள்ளது.