ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி – அர்ஜுனா MP மீது புகார்

139

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CID-இல் முறைப்பாடு – மலையக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவுக்கு எதிராக மலையக சிவில் பிரதிநிதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அவர் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கருத்துக்கள் வெளியிட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு, தகாத சொற்களை பயன்படுத்தியுள்ளதாகவும், இது ஒரு சமூகத்தை அவமதிக்கும் கடுமையான செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது அரசியல் முன்னேற்றத்திற்கும், தனிப்பட்ட YouTube தளத்தின் பிரபலத்திற்கும் ஆதாயம் பெறும் நோக்கில் திட்டமிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பி வருவதாகவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்புப் பேச்சு நிகழ்த்துவது சட்டப்படி பாரிய குற்றமாகும். இதனால், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தலைமையகத்திலும், CID-யிலும் முறையான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற சலுகைகளை பயன்படுத்தி இவ்வாறான வெறுப்புரைகள் தொடர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மலையக சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.