தினமும் 10,000 steps நடக்கிறீங்களா? உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க!

139

சமீபகாலமாக பிற உடற்பயிற்சிகளைவிடவும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்கு காரணம் வயது, உடற்தகுதி, இருப்பிடம் போன்ற எதுவுமே நடைப்பயிற்சிக்கு தேவைப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் சாதனங்கள் எதுவும் தேவைப்படாமல் தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக் கொள்ளும் எளிமையான பயிற்சியாக நடைப்பயிற்சி இருக்கிறது.

அதிலும் தினமும் 10,000 அடிகள் நடப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. சிலர் அன்றாடம் உடற்பயிற்சிகூட செய்யாமல், தினமும் 10,000 அடிகள் நடப்பதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கின்றனர். இப்படி அன்றாடம் 10,000 அடிகள் நடப்பது உடலில் என்னென்ன மாதிரியான மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்…

1) இதய ஆரோக்கியம்: அன்றாடம் 10,000 அடிகள் நடக்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாடு மேம்படும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் கூடுதலாக நடக்கும் ஒவ்வொரு 1,000 அடிகளும் (சுமார் 10,000 அடிகள் வரை) மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற முக்கிய இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக அதிக வேகத்தில் நடப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவுகளை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருக்கவும் உதவுகின்றன.

2) ரத்த சர்க்கரை அளவு: ப்ரீ-டயாபிட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாடம் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் அவர்களின் இன்சுலின் உணர்திறன் மேம்படும். நடக்கும்போது தசை செயல்பாடுகள் மேம்படுவதால், ரத்தத்தில் குளுக்கோஸ் சரியாக உட்கரிக்கப்படும். இதன் காரணமாக சாப்பிட்டபின் ரத்த சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படுகிறது. அன்றாடம் இத்தனை அடிகள் நடப்பதன் மூலம், சர்க்கரை நோயாளிகள் HbA1c அளவை நல்ல முறையில் கட்டுக்குள் வரும்.

3) மனநலன் மேம்படும்: அன்றாடம் 10,000 அடிகள் நடப்பது மன அழுத்தத்தை குறைக்கவும், மன நலனை மேம்படுத்தவும் உதவும். பதற்றம், கோபம், எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் அதிகம் இருப்பவர்கள் அன்றாடம் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் அவற்றிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால் ஹார்மோன் சமச்சீரின்மை சரியாவதால் தூக்கம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

4) மேம்பட்ட ஆற்றல்: 10,000 அடிகள் நடக்கும்போது உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு வேகமாக கரையும். இதனால் உடல் எடை குறைப்பை சாத்தியப்படுத்தலாம் (இருப்பினும் எடை குறைப்பிற்காக 10,000 அடிகள் நடப்பவர்கள் இதை மட்டுமே சார்ந்திருக்காமல் வலிமைக்கான பயிற்சிகளையும் சேர்த்து செய்து வர வேண்டும். ஏனெனில் வலிமைக்கான பயிற்சிகளே தசை வலிமையை உறுதிசெய்யும். நடைப்பயிற்சியானது, கொழுப்பு மற்றும் கலோரி கரைக்கப்படுவதையே உறுதிசெய்யும்). 10,000 அடிகள் என்பது ஒருவரின் உடல் எடை, உடல்நலப் பிரச்சினைகள் அடிப்படையில் சராசரியாக 300 முதல் 500 கலோரி வரை கரைக்கும். எனவே கொழுப்பு வேகமாக கரைவதுடன், ஆற்றல் திறன் மேம்பட்டு சோர்வு இல்லாமல் நாள் முழுக்க இருக்க முடியும்.

5) வளர்சிதை மாற்றம்: தினமும் 10,000 அடிகள் நடப்பது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும். குறிப்பாக உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது கூட, சற்று அதிக கலோரிகளை எரிக்கும். கொழுப்பை எரிப்பது மட்டுமல்லாமல், எடை குறையும்போது தசைகளைப் பராமரிக்கவும் அல்லது புதிய தசைகள் உருவாகவும் இந்த நடைப்பயிற்சி உதவும். இதுபோன்ற காரணங்களால் உடல் வடிவம் மேம்படும்.

குறிப்பு: புதிதாக நடைப்பயிற்சி செல்பவர்கள், எடுத்தவுடன் 10,000 அடிகள் நடக்க வேண்டாம். 10 நிமிடங்களுக்கு எவ்வளவு தூரம் நடக்க முடிகிறதோ அதுவே போதும். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற வேகத்தில் நிமிடங்களையும் அடிகளையும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.