பிள்ளைகளைக் கடத்திவிட்டு 15 ஆண்டுகள் தப்பியோடிய தாய் கைது.!

201

கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (52) ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டு, தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடத்தியதாக அவருக்கு எதிராக இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் 2009ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது தந்தை ஸ்டீபன் வாட்கின்ஸுக்கு குழந்தைகளை வளர்க்கும் முழு உரிமை வழங்கப்பட்ட இரண்டே மாதங்களில், வார இறுதியில் சந்திக்கும் அனுமதி பெற்றிருந்த எடிட்டா, தனது தந்தையின் உதவியுடன் குழந்தைகளை அமெரிக்கா வழியாக ஜெர்மனிக்குக் கொண்டு சென்று தப்பிச் சென்றார். பின்னர், குழந்தைகள் போலந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், கனடா மற்றும் போலந்து இடையே குற்றவாளி பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாததால் வழக்கு சிக்கலானது. குழந்தைகள் அந்நாட்டு சூழலுடன் ஒன்றிப்போனதால் அவர்களை மீண்டும் அனுப்ப போலந்து நீதிமன்றம் மறுத்தது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த எடிட்டா தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அவர் தனது மகன்களுடனும் முன்னாள் கணவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நீண்டகாலமாக நீடித்த இந்த வழக்கில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.