சோகத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்; 3 இலங்கைத் தமிழர்கள் பலி.!

148

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அவர்கள் விமான நிலையத்துக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் நவாலியைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணின் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்தினர் கடந்த வாரம் துருக்கிக்கு சென்றிருந்தனர். கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பும் வழியில், அவர்கள் பயணித்த வாடகை வாகனம் விபத்துக்குள்ளானதில் பிறந்தநாள் கொண்டாடிய பெண், அவரது 28 வயது மகன் மற்றும் 47 வயதுடைய மற்றொரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், அதிவேகம் அல்லது கட்டுப்பாட்டை இழந்தமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக துருக்கி காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயர சம்பவம் வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களை பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.