எரிபொருள்–மின்சார சிக்கனம்: அரசும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்.

178

எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு இந்த வழிகாட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்களின் படி, அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்து அல்லது குழு பயண முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிக்கள பணிகளுக்கான வாகன பயன்பாட்டை குறைக்க தினசரி போக்குவரத்து திட்டங்கள் தயாரிக்க வேண்டும் என்றும், அலுவலகங்களில் இயற்கை வெளிச்சம் பயன்படுத்துதல், குளிரூட்டிகளுக்கு பதிலாக விசிறிகளை பயன்படுத்துதல், மின்தூக்கிகளுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துதல் போன்ற மின்சார சிக்கன நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தேவையற்ற நேரங்களில் வீதி விளக்குகளை அணைப்பதும், தொழில்நுட்ப வசதிகள் உள்ள இடங்களில் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையையும் ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாத நேரங்களில் வார இறுதிகளில் அலுவலகங்களை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரத்தை மிகக் குறைவாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரச அதிகாரிகளும் பொதுமக்களும் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.