தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!

160

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று (23) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த போராட்டம், இன இழிவுபடுத்தல் மற்றும் வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் தேவைகளை முன்வைப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களிலும் பொதுத் தளங்களிலும் இனங்களுக்கு இடையே இழிவுபடுத்தும் கருத்துகளை வெளிப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படவுள்ள மகஜரும் வாசிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், வெறுப்பு பேச்சுகள் சமூக நல்லிணக்கத்தையும் ஜனநாயக மரபுகளையும் பாதிக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டதுடன், இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்தால் இனவாதம் மற்றும் பிரிவினை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு மரியாதை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் உரைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வெறுப்பு பேச்சுகளைத் தடுக்க வலுவான சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.