பால்மா, கோதுமை மாவு விலை உயருமா? இறக்குமதியாளர்கள் அரசுக்கு உறுதி.

101

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் திங்கட்கிழமை (23) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உறுதியளித்துள்ளன. தற்போதைய போர்ச் சூழ்நிலை காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் டொலர் மதிப்பு அதிகரிப்பு காரணமாக உற்பத்திச் செலவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலை உயர்வை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்புகள் உள்ளதாகவும், சித்திரை புத்தாண்டு காலம் முடியும் வரை விலையை உயர்த்தமாட்டோம் என்றும் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை, எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து நிறுவனங்கள் கவனம் செலுத்திய நிலையில், போக்குவரத்து தேவைகளுக்கான எரிபொருள் திட்டமிடலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் உணவு விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.