யாழ் விரிவுரையாளர் கொலை – மருமகன் பகீர் ஒப்புதல்!

446

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது,

கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர்.

 

பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார்.

இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது.

 

வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார்.

 

அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார்.

அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார்

உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார்.

பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

 

பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர்.

 

பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர்.

 

அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார்.

அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர்

அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார்.

அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் – மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாருக்கு மருமகன் கூறியுள்ளார்.

அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.