எரிபொருள் நெருக்கடி தாக்கம்: புகையிரத சேவையை வலுப்படுத்த அரசுக்கு கோரிக்கை!

91

சர்வதேச எரிபொருள் நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்து சேவைகள், குறிப்பாக புகையிரத சேவையை உடனடியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்திற்கு விசேட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையுமால் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்து, விநியோகப் பாதைகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கக்கூடியதால் மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை நாடும் சூழ்நிலை உருவாகும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அலுவலக புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைத்தல், ஒற்றைத் தொகுதிகளை இரட்டைத் தொகுதிகளாக இயக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பயணிகளின் நெரிசலை குறைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், மீரிகம, பாதுக்கை, பாணந்துறை, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு போன்ற புறநகர்ப் பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி மேலதிக புகையிரத சேவைகளை அறிமுகப்படுத்துதல், குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் கூடிய சேவைகளை இயக்குதல் மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனுடன் பழுதடைந்த எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை புனரமைத்து சேவையில் இணைப்பதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், தனியார் வாகன பயன்பாட்டைக் குறைத்து எரிபொருள் சேமிப்பையும் போக்குவரத்து நெரிசல் குறைப்பையும் எட்ட இந்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.