நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 50 மிமீ வரை பலத்த மழை.!!

86

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 மிமீ-க்கு மேற்பட்ட பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரங்களில் சிறியளவு மழை எதிர்பார்க்கப்படுவதுடன், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும், மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலை முதல் மட்டக்களப்பு வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடல் பிராந்தியங்களில் மணிக்கு 20–30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.