தமிழரசின் வவுனியா உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனாக விசேட கலந்தாய்வு கூட்டம்…!

130

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான 2026ம் ஆண்டின் முதலாவது கலந்தாய்வு கூட்டம் இன்று (03.01.2026) இடம்பெற்றது.

கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மாவட்டக்கிளை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் C.V.K.சிவஞானம், பொதுச்செயலாளர் M.A.சுமந்திரன், மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், மாவட்ட செயலாளர் ந.கருணாநிதி, மாவட்ட பொருளாளர் சி.சந்திரசேகரம், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சபை நடவடிக்கைகளில் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இடையூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச்செயலாளர் இதன்போது இறுக்கமாக தெரிவித்திருந்தார்.

சபை செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாக சகல உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதையும் அதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதையும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.