அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் வீதி விபத்தில் உயிரிழப்பு.!!

174

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரரான குருகுலசூரிய முதியன்சலாகே பியசேன, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ வீரரான அவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14 ஆம் திகதி கல்கமுவ – பாலு சியம்பலேவ பகுதியில் உள்ள தனது மற்றொரு சகோதரரின் வீட்டில் நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு தங்கியிருந்த அவர், மறுநாள் அதிகாலை தனது இல்லத்திற்குத் திரும்புவதற்காக வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அதிகாலை சுமார் 5.50 மணியளவில் அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் பயணித்தபோது, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் அவரது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீதியோரத்தில் லொறியை நிறுத்தி வைத்திருந்த சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று திங்கட்கிழமை (16) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.