தெற்கு கடற்பரப்பில் 123 கிலோ ஹெரோயின் கைப்பற்றி 5 பேர் கைது.!!

159

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேவேந்திரமுனை கடற்பரப்பிற்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கடற்படையினரால் வழிமறிக்கப்பட்ட அந்த படகு இன்று திங்கட்கிழமை காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின் போது 06 மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 123 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 300 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.