கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் கைது.!!

132

சுமார் 1 கோடியே 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள், நிறத்தை மெருகூட்டும் கொலாஜன் (Pink Gluta Collagen) மற்றும் விட்டமின் C மாத்திரைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Channel வழியாக இவற்றை கடத்த முயன்றபோது சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து AirAsia FD-140 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

சோதனையின் போது 1 கிலோகிராம் 632 கிராம் குஷ் போதைப்பொருள், 2,160 கொலாஜன் பொட்டலங்கள் மற்றும் 6,390 விட்டமின் C மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறான பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) அனுமதி அவசியமாகும். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.