பணக்காரன் ஆவது இவ்வளவு ஈசியா?

138

நம்மில் பலர் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக மாடாய் உழைப்போம். ஆனால் வெறும் கடின உழைப்பு மட்டும் ஒருவரை பணக்காரராக மாற்றிவிடாது. அதற்கென ஒரு பிரத்யேகமான மைண்ட்செட் தேவை. உலக கோடீஸ்வரர்கள் பலரும் பின்பற்றும் ஒரு மிக முக்கியமான புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நெப்போலியன் ஹில் எழுதிய அந்த வரலாற்று சிறப்புமிக்க Think and Grow Rich என்றபுத்தகம் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த புத்தகத்தில் கூறியுள்ள பணத்தை ஈர்க்கும் சில மாஸ்டர் கிளாஸ் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செல்வத்தை ஈர்க்கும் 5 முக்கிய ரகசியங்கள்!1. வெறித்தனமான ஆசை: சும்மா ஆசைப்பட்டால் மட்டும் பணம் நம் கைக்கு வந்துவிடாது. எனக்கு எவ்வளவு பணம் வேண்டும், அதை நான் எந்த நாளுக்குள் அடைவேன் என்ற ஒரு மிகத் தெளிவான, வெறித்தனமான ஆசை இருக்க வேண்டும். அந்த ஆசை தான் நம்மை தூங்க விடாமல் வேலை செய்ய தூண்டும் ஒரு பெரிய உந்துசக்தியாக மாறும்.

2. அசைக்க முடியாத நம்பிக்கை: நாம் நினைத்தது நடக்குமா என்ற ஒரு சின்ன சந்தேகம் கூட நமக்குள் எழக்கூடாது. என் இலக்கை நான் அடைந்தே தீருவேன் என்ற நூறு சதவீத நம்பிக்கை மட்டுமே ஆழ்மனதில் ஆழமாக பதிய வேண்டும். நம் மீது நாமே வைக்கும் அந்த (குருட்டு) நம்பிக்கைதான் பல மாயாஜாலங்களை நிகழ்த்தும்.

3. ஆழ்மனதிற்கு கட்டளையிடுதல்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவில் தூங்கும் முன்பும் நமது இலக்கை வாய்விட்டு சத்தமாக சொல்லி பழக வேண்டும். இப்படி திரும்பத் திரும்ப சொல்வதால், நமது மூளை அதை நிஜம் என நம்பி அதற்கான வழிகளை தானாகவே தேட ஆரம்பிக்கும். இது ஒரு மாபெரும் உளவியல் தந்திரமாகும்.

4. மாஸ்டர் மைண்ட் குரூப்: நாம் எந்த மாதிரி மனிதர்களுடன் பழகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். ஒரே மாதிரியான இலக்குகள் மற்றும் பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மனிதர்களுடன் மட்டுமே நமது நட்பு வட்டம் இருக்க வேண்டும். நெகட்டிவாக பேசுபவர்களை விட்டு பல மைல் தூரம் விலகி இருப்பது பணக்காரராவதற்கான முதல் படியாகும்.

5. சரியான திட்டமிடல்: ஆசை மற்றும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது. அந்த இலக்கை அடைய ஒரு பக்காவான பிளான் கையில் இருக்க வேண்டும். ஒரு திட்டம் தோல்வியடைந்தால், உடனே சோர்ந்து போகாமல் மாற்றுத் திட்டத்தைத் தீட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், செல்வம் என்பது முதலில் நமது மூளையில் தான் உருவாகிறது. அதன்பிறகு தான் அது நிஜ உலகிற்கு வருகிறது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்பதுதான் இந்த முழு தத்துவத்தின் மையக்கருத்து. இந்த பாயிண்டுகளை வெறும் தியரியாகப் படிக்காமல், அன்றாட வாழ்க்கையில் செயலில் காட்டினால் அந்த வெற்றி தேவதை நிச்சயம் நமது கதவை தட்டுவாள்.

நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் உலகில் எதையும் சாதிக்கலாம்.