ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.

78

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக் பர்கம் தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் 17 நாடுகள் பங்கேற்கும் இந்தோ–பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு அமைச்சர்கள் வணிக மன்றத்தில் உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “எரிசக்தி ஆதிக்கக் கொள்கை” அமெரிக்காவின் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, நட்பு நாடுகளுக்கு தடையின்றி எரிசக்தி ஆதாரங்களை விற்பனை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். மேலும், பிராந்திய நாடுகளுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த அமெரிக்காவால் முடியும் என்றும், பயங்கரவாத ஆட்சிகளால் இந்த விநியோகச் சங்கிலியை சீர்குலைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, முக்கிய கனிம வளங்களுக்காக நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து பாதுகாப்பான மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். [28 பெப்ரவரி 2026] ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரே இந்த மாநாடு திட்டமிடப்பட்டதாகவும், அரசியல் தலைவர்களையும் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களையும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒன்றிணைக்கும் தளமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.