‘IRIS Dena’ போர்க்கப்பல் தாக்குதலில் 104 ஈரானிய கடற்படையினர் உயிரிழப்பு; தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.!!

99

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா’ (IRIS Dena) இந்தியப் பெருங்கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய இராணுவ நடவடிக்கை ஒன்றை நிறைவு செய்துவிட்டு ஈரான் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நேரடி மோதல்கள் எதிலும் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, அதை ஈரானிய இராணுவத் தளபதி கடுமையாகக் கண்டித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த தாக்குதல் மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.

மேலும் ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா’ கப்பலின் பெயரும் அதில் உயிரிழந்த கடற்படை வீரர்களின் தியாகமும் ஈரானிய கடற்படை வரலாற்றில் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார். ஈரானின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும், கடற்படை வலிமையை மேலும் பலப்படுத்தவும் தாம் உறுதியுடன் செயற்படுவோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.