அதிகரிக்கும் வெப்பநிலை: சில இடங்களில் 50 மிமீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு.!

89

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று [15 மார்ச் 2026] பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரை உள்ள கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலில் கிழக்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 20–30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.