நாட்டில் 25% மக்கள் வறுமையால் பாதிப்பு – அமைச்சர் உபாலி பன்னிலகே

89

நாட்டில் சுமார் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் [14 மார்ச் 2026] கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டில் வறுமையை ஒழிக்க அரசாங்கம் பல கொள்கை ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறினார்.

வறுமை ஒழிப்பில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வறுமைக்கான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகள் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க உள்ளனர். கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு பல நலன்புரித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், கடந்த 15 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதால் அதன் தாக்கத்தை குறைக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறினார். பொருளாதாரம் வலுப்படுத்தப்படாதிருந்தால் மீண்டும் ஒரு “வரிசை யுகம்” உருவாகியிருக்கும் என்றும், உலக நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.