3–5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவிப்பு

105

03 முதல் 05 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை அதிகளவில் தொழில்நுட்பக் கருவிகளுக்கு உட்படுத்துவது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக மூளை வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதால் இவ்வகை இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அமைச்சு அங்கீகாரம் வழங்கவில்லை.

அமைச்சு மேலும் குறிப்பிட்டதாவது, முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது நடத்தப்படும் இணையவழி கருத்தரங்குகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி உளவியலின்படி 3–5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகத் தொடர்புகள் நிறைந்த சூழலில் கற்றல் பெற வேண்டும். திரையை மையமாகக் கொண்டு கற்றல் நடைபெறுவது சமூகத் திறன் வளர்ச்சியை பாதிக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை குறைக்கவும், ஆக்கபூர்வமான சிந்தனை வளர்ச்சிக்கு தடையாகவும் அமையக்கூடும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில், வர்த்தக நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய கருத்தரங்குகள் சிறுவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தாது என்றும், இயல்பான வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்றும் அமைச்சு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குழந்தைகள் சூழலுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்வதே சிறந்த வழி என்றும், அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இத்தகைய இணையவழி செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.