போருக்கு எதிராக பச்சிலைப்பள்ளி சபை தீர்மணம்: உலக அமைதிக்கு ஆதரவு

169

உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம், கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு கடந்த 2026 மார்ச் 10 ஆம் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மூலம், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும், உலக அமைதியை சீர்குலைக்காமல் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத்தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், இந்த தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

போரின் வலிகளையும் காயங்களையும் அனுபவித்த சமூகமாக, போரின் விளைவுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை தாங்கள் நன்கு உணர்ந்திருப்பதாகவும், உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது முக்கியம் எனவும் சபைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக அமைதியைப் பேணும் நோக்கில் அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தங்களின் பிராந்திய மக்களின் சார்பாக ஆதரவை தெரிவிப்பதாகவும் சபைத் தலைவர் சு.சுரேன் குறிப்பிட்டுள்ளார்.