பாதி ஆண்.. பாதி பெண்.. – வண்ணத்துப் பூச்சிகளின் உலகில் ஒரு அதிசயம்

134

ஒரே உடலில் பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாக வாழும் அபூர்வ பட்டாம்பூச்சிகள், ‘கைனாண்ட்ரோமார்பிசம்’ எனப்படும் இந்த வியக்கத்தக்க இயற்கை அதிசயம் மற்றும் அதன் பின்னால் இருக்கும் சுவாரசியமான அறிவியல் காரணங்களைப் பற்றி பார்க்கலாம்.

இயற்கை எப்போதுமே ஆச்சரியங்களின் இருப்பிடம். வண்ணத்துப் பூச்சிகளின் அழகை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், ஒரு பக்கம் ஆணாகவும், மறுபக்கம் பெண்ணாகவும் இருக்கும் பட்டாம்பூச்சியை நீங்க பார்த்ததுண்டா? இது ஏதோ கற்பனை அல்ல; அறிவியலில் ‘பைலேட்டரல் கைனாண்ட்ரோமார்பிசம்’ (Bilateral Gynandromorphism) என்றழைக்கப்படும் அபூர்வ உண்மை.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ‘கிரேட் மார்மன்’ (Great Mormon) என்ற பட்டாம்பூச்சி இனத்தில் இந்த விந்தை அடிக்கடி நிகழ்கிறது. பொதுவாக, இந்த இனத்தில் ஆண் பட்டாம்பூச்சிகள் அடர் நிறத்திலும் எளிமையான சிறகுகளுடனும் இருக்கும். பெண் பட்டாம் பூச்சிகளோ பல வண்ணங்களுடன் சிக்கலான வேலைப்பாடுகள் கொண்ட சிறகுகளை கொண்டிருக்கும். ஆனால், இந்த ‘கைனாண்ட் ரோமார்பிசம்’ பாதிப்பு ஏற்பட்ட பட்டாம்பூச்சியின் உடலில் இடது பக்கம் ஆணின் நிறமும் அமைப்பும் இருக்கும்.

வலது பக்கம் பெண்ணின் வண்ணங்களும் கோலங்களும் இருக்கும். உடல் மிகச்சரியாக நடுவில் கோடு போட்டதுபோல இரண்டாகப் பிரிந்து, 2 வெவ்வேறு உலகங்களை ஒரே உடலில் சுமந்து நிற்கும். இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?