32 கோடி ரூபா பொருள் – விமான நிலையத்தில் ஒரு யுவதி உட்பட இரு கனடியர் கைது!

153

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 32 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் கனேடிய இளைஞனும் யுவதியும் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி வர முயன்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுடைய இளைஞனும் 29 வயதுடைய யுவதியுமாக இருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதன்போது இலங்கை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட இலக்கு வைக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 321,590,000 ரூபாய் (32 கோடி ரூபாய்) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் தற்போது சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுங்கப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் இருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.