வரலாற்று சிறப்புமிகு ஆனையிறவில் – பாரம்பரிய உணவகம் திறப்பு!

202

ஆனையிறவில் பாரம்பரிய உணவகம் திறப்பு!

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஆனையிறவு பகுதியில் பாரம்பரிய உணவகம் இன்று (10.03)  திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி நகரத்திலிருந்து பளை வரை பாரம்பரிய உணவகம் இல்லாத குறை நீண்ட காலமாக காணப்பட்ட நிலையில், அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் புதிய பாரம்பரிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் 07 மில்லியன் ரூபாவும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் 02 மில்லியன் ரூபாவும் செலவில் அமைக்கப்பட்ட இந்த உணவகத்தை அமைச்சர் உபாலி பன்னலகே இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரலாற்றுச்சிறப்புமிகு ஆனையிறவுப் பகுதியில் இவ்வாறான பாரம்பரிய உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டமை பயனுள்ளதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.