மூன்றாவது முறையும் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி.

189

பரபரப்பாக நடைபெற்ற 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

அதிரடிஆட்டம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இறுதிக்கட்டத்தில் ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 8 பந்துகளில் 26 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா

256 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து வரிசையை நிலைகுலையச் செய்தார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

புதிய வரலாறு

தங்கள் சொந்த மண்ணில், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்திய அணி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா, தற்போது 2026-லும் வென்று உலக கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.