மூட்டுகளில் ஏற்படும் ‘க்ளிக்’ சத்தம் ஆபத்தானதா? – எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் விளக்கம்.!!

100

சிலருக்கு முழங்காலில் அடிக்கடி ‘க்ளிக்’ / ‘டொக்’ என்றொரு சத்தம் கேட்கும். நெட்டி முறிப்பதைப் போன்ற இந்தச் சத்தம், அடிக்கடி கேட்பது சற்றே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். அது ஏன்? இதற்குக்கூட மருத்துவரை அணுக வேண்டுமா? எனில், எந்த அறிகுறிக்குப் பின் அணுக வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்க்கலாம் வாங்க. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் வினய் குமார் கௌதம், இதுபற்றி தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்த விவரங்கள் பின்வருமாறு:

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? நடக்கும்போதும், குனிந்து செல்லும்போதும், படிக்கட்டுகளில் ஏறும்போதும் இந்தச் சத்தம் வருவது பாதிப்பில்லாதது. பெரும்பாலும் வேறு எந்தப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதுவே க்ளிக் சத்தத்துடன் முழங்காலில் வலி, வீக்கம், உணர்வின்மை, உறுதியற்ற தன்மை அல்லது வளைப்பதில் சிரமம் ஏற்பட்டால், எச்சரிக்கை வேண்டும். விரைந்து மருத்துவரை அணுக வேண்டும்.மேற்குறிப்பிட்ட அறிகுறிகளோ, எந்தவித வலியோ இல்லாமல் முழங்காலில் கிளிக் சத்தம் கேட்டால், கவலைப்படத் தேவையில்லை. இந்த பாதிப்பில்லாத விரிசல் சத்தம் மருத்துவ ரீதியாக க்ரெபிட்டஸ் என்று அழைக்கப்படுகிறது. இது, மூட்டுகளுக்கு இடையில் உள்ள திரவத்தில் உருவாகும் சிறிய காற்று குமிழ்களால் ஏற்படுகிறது.

மனித உடலில் மிகவும் சிக்கலான செயல்பாடுகளைச் செய்பவை, நம் மூட்டுகள். குறிப்பாக முழங்கால் மூட்டுகள். காரணம், இது நம் உடலின் எடையைத் தாங்குகிறது. இதனால்தான் உடற்பருமானக இருப்பவர்கள் முழங்கால் மூட்டு வலியை அதிகம் எதிர்கொள்கின்றனர். மட்டுமன்றி இதயத்திலிருந்து செல்லும் ரத்தத்தைக் கால்களுக்குச் சீராக அனுப்பி, அங்கிருந்து அவற்றை மீண்டும் இதயத்திற்குப் பம்ப் செய்வதும் முழங்கால்தான். இதனால் காலப்போக்கில் அதிகப்படியான வேலையை முழங்கால் மூட்டுகள் செய்கின்றன. இவை காயம், குருத்தெலும்பு தேய்மானம் அல்லது வயது தொடர்பான பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்தி, முழங்காலின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். அதனாலேயே க்ளிக் போன்ற சத்தம், வீக்கம் / வலியோடு ஏற்படுகிறது.

சிகிச்சை என்ன?பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். தீவிரப் பிரச்சனை இருந்தால், முழங்கால் அறுவை சிகிச்சை / முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் நீண்டகால நிவாரணம் அளிக்கக்கூடும். ஆரம்பகாலத்திலேயே நோயைக் கண்டறிந்தால், நிலைமை மோசமடைவதைத் தடுத்து எளிய சிகிச்சைகள் மூலம் பிரச்சனையைச் சரிசெய்யலாம்.