AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் – மகனை மீட்க பணத்தை இழந்த குடும்பம்.!

120

AI தொழில்நுட்பம் மூலம் போலியான கடத்தல் வீடியோவை உருவாக்கி, பெற்றோரிடம் பணமோசடி நடைபெற்றுள்ளது.

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மகன்
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு விடயங்களில் பலன் அளித்தாலும், மோசடியாளர்கள் அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு.வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு சிறுவனை அவன் பெற்றோர் திட்டியதால், கடந்த பிப்ரவரி 2 ஆம் திகதி மனமுடைந்த சிறுவன் அன்று மாலை பயிற்சி வகுப்புக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, தங்களது மகனை கண்டுபிடிக்க அவனது புகைப்படம் மற்றும் தங்களை தொடர்பு எண்ணை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர்.

மறுநாள், அவர்களுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் அவர்களது மகனை ஒரு காட்டில் கடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர்.

வீடியோ அழைப்பை துண்டிக்க கூடாது எனவும், மகன் பத்திரமாக வரவேண்டுமென்றால் ரூ.1 லட்சம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் சிறுவனின் இதயம், சிறுநீரகத்தை விற்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

முதலில் பணம் இல்லை என மறுத்த பெற்றோர், தங்களது மகனை காப்பாற்ற அவர்கள் காட்டிய QR குறியீடுக்கு ரூ.1லட்சம் பணம் அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் மறுநாள் தனது நண்பர் ஒருவரை அழைத்த சிறுவன், தான் சன்வாரியா சேத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளான்.

இதனைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில், சிறுவன் கடத்தப்படவில்லை சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட புகைப்படத்தை வைத்து AI தொழில்நுட்பம் மூலம் Deep Fake வகையிலான வீடியோவை உருவாக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

வீடியோ அழைப்புகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைபேசி எண்ணை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய QR குறியீட்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கையும் ஆய்வு செய்து வருகின்றனர்.