மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் பீதி! பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.

166

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குறித்த பிரதேச மக்கள் இவ்வாறு வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனடிப்படையில், இன்றைய தினம் (01-03-2026) யாழ் வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி மந்திகை மற்றும் கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக நேற்று (28-02-2026) மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

இதனால் இரவு நேரமாகியும் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் எனும் அச்சத்தில் தற்போது எரிபொருளை பெற மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் மக்கள் முந்தியடிக்கும் சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.