பழுதடைந்த சோள விதைகள் – சத்துணவு என்ற பெயரில் நடக்கும் சதி?

72

மன்னார் நடுக்குடா பகுதியில் உரிய அனுமதி இன்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் சுகாதார துறையினர் குறித்த களஞ்சியசாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் – நடுக்குடா பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அதிகளவான சோள விதைகள் உலர விடப்பட்டுள்ளதாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சோள விதைகள் உலரவிடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த களஞ்சியசாலைக்கோ அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்த ஒரு சட்ட அனுமதியோ அல்லது சுகாதார மருத்துவ சான்றிதலோ பெறப்படவில்லை எனவும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வளவு தொகை பழுதடைந்த சோள விதைகள் எவ்வாறு எந்த ஒரு அனுமதியும் இன்றி மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இந்த விதைகளை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பிலும் மேலதிக விபரங்களை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆய்வு செய்து வருகின்றது.

மேலும் அவை, உரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்றாது உலரவிடப்பட்டுள்ளதுடன் களஞ்சியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் முதல் கட்டமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த சோளவிதைகளை பயண்படுத்தி சட்டவிரோத தரமற்ற சத்துணவு பொருள் ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்தோடு, மேற்படி விதைகளை விலங்குனவாக பயன்படுத்தும் வகையில் கூட எந்த ஒரு அனுமதியும் பெறப்படாத நிலையில் நீதிமன்ற அனுமதியை பெற்று அனைத்து சோள விதைகளை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.