வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம் – 50 வயது பெண் கைது

216

பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில், வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இன்று (23) கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்பில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையம் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

பொலிஸார் தெரிவித்ததாவது, இன்று மதியம் பண்டாரிகுளம் முனியப்பர் கோயில் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளவுக்குள் உள்ள கடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலங்கை பொலிஸ் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளில் தெரியவந்ததாவது, கைது செய்யப்பட்ட பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயது பெண்ணுடன் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, அடுக்குமாடி உரிமையாளர் அவரை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வேலை நீக்கம் தொடர்பான விரோதமே கத்திக்குத்து சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காயமடைந்த 64 வயது பெண் ஆபத்தான நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.