கிளிநொச்சியில் புதிய திரையரங்கு ஏ9 சாலையில்!

105

நல்ல பொழுது போக்குகள் இல்லாத சமூகம் காட்டுமிராண்டிகளாக மாறும்
(மு.தமிழ்ச்செல்வன்)

ஒரு சமூகத்திற்கு நல்ல பொழுது போக்கு என்பது மிக மிக அவசியமானது.உள ஆரோக்கியத்திற்கும் , உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் பொழுதுபோக்குகள் இன்றியமையாத ஒன்று. நல்ல பொழுது போக்கு” என்பது நேரத்தை மட்டும் நிரப்புவது அல்ல;
மனதை வளப்படுத்தி, மனிதனை மனிதனாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

வாசிப்பு, இசை, கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுப்படுதல் ஆதாவது கவிதை கட்டுரைகள் என எழுதுதல், சினிமா, விளையாட்டு, இயற்கையுடன் பொழுதை கழித்தல், சுற்றுலா, என பொழுது போக்குகளை கூறிக்கொண்டே போகலாம்.

நல்ல பொழுது போக்கு என்பது பழக்கமாக மாறும்போது தான் வாழ்க்கை தரமாக மாறுகிறது. சினிமா உட்பட நல்ல, ஆரோக்கியமான பொழுது போக்குகள் இல்லாத சமூகம் பல்வேறு பாதிப்புகளுக்குள் மெது மெதுவாக சென்று சிக்கிக்கொள்ளும்.

நல்ல பொழுது போக்குகள் மனித மனதிற்கு ஓய்வையும் சமநிலையும் தருகிறது. அது இல்லாத சமுதாயத்தில்
கோபம், மன அழுத்தம், விரக்தி,தன்னம்பிக்கை குறைவு, பிறழ்வான செயற்பாடுகள் என ஒரு சமூகத்திற்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாவது நல்ல மாற்றுகள் இல்லாதபோது,
போதைப் பொருள், சூதாட்டம்,சமூக விரோத செயல்கள், போன்ற சமூக புறழ்வான செயற்பாடுகள்
பொழுது போக்குகளாக மாறும் அபாயம் ஏற்படும்.

எனவே ஒரு சமூகத்திற்கு பொழுது போக்கு அம்சங்கள் மிக மிக முக்கியமானதொன்று. அதுவும் 30 வருடங்களாக யுத்தத்திற்குள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் உளவியல் மேம்பாட்டிற்கு பொழுதுபோக்கு அவசியமானது. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு நல்ல பொழுதுபோக்குக்கான களம் இல்லாத நிலைமையே தொடர்கிறது. நல்ல நூலகம் இல்லை, ஓய்வான நேரத்தில் நடைப்பதற்கு நல்ல நடைபாதை சூழல் இல்லை, குழந்தைகள் சிறுவர்கள் மகிழ்வாக பொழுதுபோக்க இடங்கள் இல்லை. றீச்சா இப்பொழுது அந்த குறையை நிவர்த்தி செய்த போதும் எல்லோராலும் அங்கு செல்ல முடியாத நிலை.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக பெரும குறையாக இருந்து வந்த சினிமா திரையரங்கு இல்லாத நிலைமையினை இன்று KPK நிறுவனத்தினர் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். வடக்கில் உள்ள திரையரங்கு திரைகளை விட பெரிய திரையை கொண்டதும், நல்ல Sound சிஸ்டங்களையும், வசதியான இருக்கைகளையும் கொண்டு ஒரு அழகான திரையரங்கை அழகான பெயரில் ஆரம்பித்துள்ளனர்.

2009 வரை வியாபார துறையில் சேரன் சோழன், பாண்டியன், மருதம், இளவேனில், காமதேனு, என்று கோலோச்சிய பெயர்களில் ஒன்றான சேரன் என்ற பெயரில் ஏ9 வீதியில் பழைய கச்சேரிக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியே.