இறாணுவத்தால் அழிக்கப்படும் பனை வளம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

184

வலி. வடக்கு: மக்களின் நிலங்களில் பனை மரங்கள் இராணுவத்தால் நிர்மூலம்; மௌனம் காக்கும் பனை அபிவிருத்திச் சபை!

யாழ்ப்பாணம்: யாழ். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் முடக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பனை மரங்கள், படையினரால் அடியோடு இடித்து அழிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட திட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகள் குறித்து அரச இயந்திரங்கள் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் சட்ட விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தக் காணியில் நிற்கும் பனை மரத்தை வெட்டுவதாக இருந்தால் கூட, பனை அபிவிருத்திச் சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும். அவ்வாறு அனுமதி பெறத் தவறின் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

ஆனால், வலி. வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர், எவ்வித அனுமதியுமின்றி இயந்திரங்களைப் பயன்படுத்தி பனை மரங்களை வேரோடு பிடுங்கி அழித்து வருகின்றனர். நில உரிமையாளர்களின் ஒப்புதலோ அல்லது உரிய திணைக்களங்களின் கண்காணிப்போ இன்றி இந்த அழிப்புப் பணிகள் தொடர்கின்றன.

வடபுலத்தின் வாழ்வாதார அடையாளமாகவும், பொருளாதாரப் பலமாகவும் விளங்கும் பனை மரங்கள் இடிக்கப்படுவது வெறும் சூழலியல் பாதிப்பு மட்டுமல்ல; அது அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை திட்டமிட்டு சிதைக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்பினாலும், அங்கே எஞ்சியிருக்கப்போவது வெறும் தரிசு நிலங்களே என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

தேசிய சொத்தாகக் கருதப்படும் பனை மரங்கள் இவ்வாறு வகைதொகையின்றி அழிக்கப்படும் நிலையில், அதனைக் கண்காணிக்க வேண்டிய பனை அபிவிருத்திச் சபை மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இது குறித்து எந்தவிதமான கண்டனங்களையோ அல்லது சட்ட நடவடிக்கைகளையோ எடுக்க முன்வரவில்லை.

இந்த நில அபகரிப்பு மற்றும் வள அழிப்புச் செயற்பாடுகள் சர்வதேச விதிகளுக்கும், நாட்டின் அடிப்படைச் சட்டங்களுக்கும் முரணானது எனச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்புகள், உடனடியாக இவ்விடயத்தில் நீதித்துறை தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.