40 பயணிகளின் உயிர் காத்த சாரதி – 50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து.!

193

நுவரெலியா – நீல்தண்டாஹின்னையில் இருந்து தெரிபஹை நோக்கி பயணித்த வலப்பனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று காலை பாரிய விபத்திலிருந்து தப்பியுள்ளது.

இராசிங்கொல்ல முதலாவது வளைவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேருந்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ சென்றுள்ளது.

எனினும், சாரதி மிக சாதுரியமாக செயற்பட்டு Handbrake பயன்படுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தை ஓட்டிச் சென்றபோது இராசிங்கொல்ல பகுதியில் பெரும் சத்தத்துடன் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக பேருந்து சாரதி சமன் திலகசிறி தெரிவித்துள்ளார்.

உடனடியாக Handbrake பயன்படுத்தி பேருந்தை நிறுத்தினேன். பேருந்து நின்ற இடத்திற்கு கீழே 50 அடி பள்ளத்தில் ரூபஹா வீதி தெரிந்தது. பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். நான் இறங்கிப் பார்த்தபோது பேருந்தின் Joint உடைந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிட்வா சூறாவளியினால் மண்சரிவுக்குள்ளான குறித்த வீதியின் குறுகிய வளைவுப் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியின் செயல்பாட்டினால் பாரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வலப்பனை போக்குவரத்து சபை அதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்