விமானத்தில் பயணியின் நிர்வாண ரகளை! அவசரக் கதவைத் திறக்க முயன்றதால் பரபரப்பு.!

190

வியட்நாமில் இருந்து தாய்லாந்து – பெங்கொக் நோக்கிப் பயணித்த ஏர் ஏசியா (AK647) விமானத்தில், ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்ட அந்த விமானத்தில், திடீரென ஒரு பயணி தனது ஆடைகளைக் களைந்துவிட்டு கருப்பு நிற உள்ளாடையுடன் விமானத்திற்குள் ஓடத் தொடங்கியுள்ளார்.

இதன்போது அவர், இருக்கைகள் மீது ஏறி குதித்தும், கூச்சலிட்டும் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். விமானப் பணிப்பெண்களிடம் ஆங்கிலத்தில் “என்னைத் தொடாதீர்கள்” (Don’t touch me) என்று கத்திய அந்த நபர், விமானத்தின் அவசரக் கதவைத் (Emergency Exit) திறக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

மேலும், “இங்கேயே நாம் சாக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களா?” என ரஷ்ய மொழியில் கத்தியபடி விமானத்தில் இருந்து குதிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

பயணியின் கட்டுப்பாடற்ற நடத்தையால் விமானத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக பேங்கொக்கின் டான் முயாங் (Don Mueang) சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியவுடன், படிக்கட்டுகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே அவசரக் கதவு வழியாக அந்த நபர் ஓடுபாதையில் (Tarmac) குதித்துள்ளார். தாய்லாந்து சட்டத்தின்படி அவருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.